மாஸ்கோ, பிப்ரவரி 24: மத்திய மாஸ்கோவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான சாவியோலோவ்ஸ்கி (Savyolovsky) சதுக்கத்தில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் அங்கிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் இரண்டு அதிகாரிகள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.05 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதலில், வெடிகுண்டை ஏந்தி வந்த அந்த மர்ம நபரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்ததாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தலைநகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பரபரப்பான ரயில் நிலையப் பகுதியில் நடந்த இத்தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் ரஷ்ய புலனாய்வுக் குழு, தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றது.
இதனையடுத்து, சட்ட அமலாக்க அதிகாரியைக் கொல்ல முயன்றது மற்றும் சட்டவிரோதமாக வெடிபொருட்களை வைத்திருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
முக்கியமான இக்காலகட்டத்தில் நிகழ்ந்த இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார் அல்லது அதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.






