ஷா ஆலாம், ஜூலை 15: கடந்த ஜூலை 4-ஆம் தேதி, ஸ்டேடியம் ஷா ஆலாம் LRT3-இல் ஏற்பட்ட இரயில் கோளாறுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
இரயிலின் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, அது மின்சாரக் கடத்தியுடன் (power conductor) உராய்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ரேபிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மாலை 7.05 மணியளவில் ஷா ஆலாம் அரங்கம் (Shah Alam Stadium) எல்ஆர்டி நிலையத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் போது, ஒரு சிறிய வெடிப்புச் சத்தமும் தீப்பொறியும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இச்சம்பவத்தால் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்ததாகவும் ரேபிட் கேஎல் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த உடனடியாக, சம்பந்தப்பட்ட அந்த இரயில் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அதிலிருந்த பயணிகள் அனைவரும் அடுத்த நிலையத்திலேயே பத்திரமாக இறக்கப்பட்டு, மற்றொரு இரயிலின் மூலம் தங்களின் பயணத்தைத் தொடர வழிவகை செய்யப்பட்டது.
அதன் பின்னர், அந்த இரயில் ஆய்விற்காகக் கொண்டு செல்லப்பட்டு, பழுதடைந்த பாகங்கள் அனைத்தும் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அந்த இரயில் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகச் சேவையில் ஈடுபடுத்த அனுமதிக்கப்பட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் ரேபிட் கேஎல் குறிப்பிட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு எப்போதும் தங்களின் நிறுவனம் முதலிடம் வழங்கும் என்று கூறியுள்ள ரேபிட் கேஎல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிற இரயில்களும் தீவிரப் பரிசோதனைக்கும் கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.







