ஷா ஆலாம், 9 ஜூலை: பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட தரமான வீடுகளை எளிதாகப் பெறுவதற்காக, எல்ஆர்டி 3 (LRT3) வழித்தடத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் , மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட மொத்தம் 5,430 மலிவு விலை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டம், LRT3 வழித்தடத்தில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், தற்போது கட்டுமானத்தில் உள்ள வீடுகள் மற்றும் எதிர்காலத்தில் கட்டப்படவிருக்கும் திட்டங்களை உள்ளடக்கியது என சிலாங்கூர் வீடமைப்பு - நில சொத்துடமை வாரியம் (LPHS) தெரிவித்தது.
ருமா சிலாங்கூர்கு (RSKU) திட்டத்தின் கீழ் 800 முதல் 1,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட மலிவு விலை வீடுகளின் விற்பனை விலை RM170,000 முதல் RM270,000 வரை விற்கப்படுகிறது.
அதே நேரத்தில், 450 முதல் 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வணிக ரீதியான மலிவு விலை வீடுகளின் விலை RM230,000 முதல் RM270,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என சிலாங்கூர் வீடமைப்பு - நில சொத்துடமை வாரியம் மெடியா சிலாங்கூரிடம் தெரிவித்தது.
தற்போது கட்டுமானத்தில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் 2027 மற்றும் 2028 -ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தற்போது கட்டுமானத்தில் உள்ள மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள வீடுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான பொதுமக்கள், https://ehartanah.lphs.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட சில வீடுகள், சிலாங்கூர் வீடமைப்பு - நில சொத்துடமை வாரிய அமைப்பின் துணை நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஸ்மார்ட் செவா திட்டம் (Skim Smart Sewa) மூலமாக வாடகைக்கு வழங்கப்படவுள்ளன.







