ஷா ஆலாம், ஜூலை 14 - சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டமானது, சில வளர்ந்த நாடுகளின் வெற்றிகரமான முன்னெடுப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளதாக மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இத்தகைய திட்டங்கள் வெறும் வீண் விரயம் அல்ல, மாறாகக் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கான ஒரு சிறந்த முதலீடு என்பதைப் பல நாடுகள் ஏற்கனவே நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் பல நாடுகள் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை நீண்ட காலமாகச் செயல்படுத்தி வருவதோடு, அது மாணவர்களின் நலன் மற்றும் கல்வி வளர்ச்சியில் பெரும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சிலாங்கூர் மாநிலத்தில் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
இதன் மூலம் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமயத் துறையின் (JAIS) கீழ் இயங்கும் மதப் பள்ளிகள் மற்றும் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் (JPN) கீழ் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள் உட்பட மொத்தம் 965 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 120,000 மாணவர்கள் பயனடையவுள்ளனர்.
குறிப்பாக, அண்டை நாடான இந்தியா போன்ற நாடுகள் கடந்த 2022-ஆம் ஆண்டில் இத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்திய பிறகு, அங்குப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதோடு, பள்ளியிலிருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாகவும் அவர் தனது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் தரவுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட தேவையுடைய மாணவர்களின் குடும்பப் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில், வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இந்த இலவச காலை உணவு வழங்கப்படும் என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.







