லெம்பா பெரிங்கின், ஜூன் 26: சிலாங்கூர் மாநிலத்தின் அந்தஸ்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அதே வேளையில் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2026-ஆம் ஆண்டு சுக்மா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடத்தப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
தேவையற்ற சில நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளதாகக் கூறிய அவர், அதற்குப் பதிலாக, அதிகமான பார்வையாளர்களையும் ஆதரவாளர்களையும் ஈர்க்க விளையாட்டு நடவடிக்கைகளில் மட்டுமே தங்களின் முழு கவனமும் செலுத்தப்படும் என்றார்.
2026 சுக்மா போட்டிகளை மிகவும் விவேகமான முறையில் நடத்த வேண்டும் என்ற சிலாங்கூர் சுல்தானின் கட்டளையைத் தொடர்ந்து இந்த சிக்கன நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
நிகழ்ச்சியின் தரம் குறையாமல், பொதுமக்களின் பணம் பொறுப்புடன் செலவிடப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் சுல்தானின் அறிவுரைக்கு இணங்கவே இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் என மாநிலத் தலைவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இப்போட்டிகளைச் சிறப்பாக நடத்த சிலாங்கூர் மாநில அரசு 10,000 பதிவுசெய்த தொண்டூழியர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதற்காக ஒட்டுமொத்தமாக 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட வேளையில், அவர்களில் 10,000 பேர் மட்டுமே சுக்மா தொண்டூழியர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அமிருடின் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலம் 22-ஆவது சுக்மா விளையாட்டுப் போட்டிகளை எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடத்தவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா சுக்மா (Para SUKMA) போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.







