ஷா ஆலம், ஜூன் 19: உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 'சிலாங்கூர் உணவு கிடங்கு' (Gudang Makanan Selangor) திட்டத்தின் கீழ் ஐந்து முக்கிய அத்தியாவசிய உணவுகளுக்கான அவசரக்கால சேமிப்பை (Stok Penimbal) உருவாக்க சிலாங்கூர் மாநில அரசு 50 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டம் மூலம், எதிர்வரும் டிசம்பர் 2026-க்குள் இந்த இலக்கு முழுமையாக எட்டப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இதுவரை இக்கிடங்கின் மூலம் 3,750 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருட்கள் அவசரக்கால இருப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது சிலாங்கூர் மாநிலத்தின் 30 சதவீத மக்களின் மாதாந்திரத் தேவையில் 7.93 சதவீதத்திற்குச் சமமானதாகும். இதன் தொடர்ச்சியாக, இக்கிடங்கின் மூலம் மேலும் 3,500 மெட்ரிக் டன் அரிசியைக் கூடுதலாகச் சேமிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் வழி, அரிசிக்கான அவசரக்கால சேமிப்பு அளவு 15.34 சதவீதமாக உயர்த்தப்படும். அதுமட்டுமின்றி, எதிர்வரும் டிசம்பர் 2026-ஆம் ஆண்டிற்குள் 1,000 மெட்ரிக் டன் கோழி இறைச்சி, 100 மெட்ரிக் டன் மாட்டு இறைச்சி, 800 மெட்ரிக் டன் மீன் மற்றும் 150 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதன் மூலம், ஐந்து முக்கிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தடையற்ற இருப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என்று அவர் விவரித்தார்.
உணவுக் கிடங்கு திட்டத்தைத் தவிர்த்து, மாநில மக்கள் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்காக, 779 இடங்களில் 'ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை' (Jualan Ehsan Rahmah - JER) திட்டத்தை நடத்துவதற்கு மாநில அரசு 10 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 3.1 மில்லியன் சிலாங்கூர் மக்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று அமிருடின் தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் (DUN) மாதத்திற்கு இரண்டு முறை இந்த மலிவு விற்பனை நடத்தப்படும். கடந்த மே மாதம் முதல் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு விற்பனைத் திட்டம் எதிர்வரும் டிசம்பர் 2026 வரை தடையின்றித் தொடரும் என்று அவர் உறுதி அளித்தார்.
மாநிலத்தில் உள்ள சில்லறை வர்த்தகக் கடைகளின் வருமானத்தைப் பாதிக்காத வகையில், அதே வேளையில் உண்மையில் உதவி தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாகக் கைகொடுக்கும் மாநில அரசின் உன்னத நோக்கத்திற்கு இந்த மலிவு விற்பனைத் திட்டம் ஒரு மிகச்சிறந்த அடையாளமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியா போர் மோதல்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு மற்றும் விலைவாசி உயர்வு சவால்களை, மாநில மக்கள் மற்றும் வணிகத் துறையினர் தைரியமாக எதிர்கொள்ள உதவுவதற்காகவே சிலாங்கூர் மாநில அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.






