கோலாலம்பூர், ஜூலை 14 - எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 10-ஆவது சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு (SIBS), 7 முக்கிய முதன்மைப் பிரிவுகளை உள்ளடக்கி மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக ‘இன்வெஸ்ட் சிலாங்கூர்’ (Invest Selangor Bhd) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஹசான் அஸாரி இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 14 முதல் 17 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆண்டின் உச்சிமாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் மிகச் சீராக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சிலாங்கூர் முதலீடு மற்றும் தொழில் பூங்கா கண்காட்சி (SPARK), சிலாங்கூர் ஆசியான் வணிக மாநாடு (SABC), சிலாங்கூர் முதலீட்டு அரங்கம் (SIF), சிலாங்கூர் டெக்ஸ்பியர் உச்சிமாநாடு (Selangor TechSphere Summit), சிலாங்கூர் சர்வதேச பராமரிப்பு கண்காட்சி (Selangor International Care Expo), ஏஐ மற்றும் செமிகண்டக்டர் உச்சிமாநாடு (AI and Semiconductor Summit) ஆகியவற்றுடன் இதர ஆதரவு திட்டங்களும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்தார்.
இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்த 'SIBS' மாநாடு, நாட்டின் மிகப்பெரிய வணிகக் கண்காட்சிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளதுடன், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஒன்றுகூடி வணிக வாய்ப்புகளை ஆராயவும், புதிய கூட்டணிகளை உருவாக்கவும், சிலாங்கூரை ஒரு சிறந்த முதலீட்டு இடமாகக் காட்டவும் முக்கிய தளமாக விளங்கி வருகிறது.







