லங்காவி, ஜூன் 29 - லங்காவி தீவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துவதன் வழி, அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சிறு, நடுத்தர தொழில்முனைவோரின் (SME) போட்டித்தன்மையை அதிகரிக்கவும் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, லங்காவிக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து பல்வேறு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. அதே வேளையில், லங்காவி மேம்பாட்டு வாரியத்தின் (Lada) வாயிலாக படகு போக்குவரத்துச் சேவைகளும் சீரமைக்கப்படும்.
சுற்றுலாத் துறையோடு சேர்த்து, உள்ளூர் தயாரிப்புகள் மூலமாகவும் லங்காவியின் பொருளாதாரத்தை விரிவுபடுத்த முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். வணிகத்தை விரிவுபடுத்துவதில் உள்ள சவால்கள், குறிப்பாக வரி நடைமுறைகள் மற்றும் இதர தடைகள் குறித்து தொழில்முனைவோர் தங்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் லங்காவி வணிகர்களின் போட்டித்தன்மையை உலகளாவிய சந்தை அளவில் உயர்த்த முடியும் என்றார் அமைச்சர். இதற்காக, சுங்கத்துறை மற்றும் லடா வாரியத்துடன் இணைந்து தகுந்த தீர்வுகள் ஆராயப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மேலும், அரசாங்கம் வழங்கி வரும் மைக்ரோ-ஃபைனான்சிங் போன்ற பல்வேறு நிதி உதவித் திட்டங்களைப் பயன்படுத்தி வணிகத்தை எவ்வாறு பெருக்குவது என்பது குறித்து தொழில்முனைவோருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் மற்றும் 'டிஜிட்டல் நோமட்ஸ்' எனப்படும் நாடோடித் தொழில்நுட்பப் பணியாளர்களை லங்காவிக்கு ஈர்ப்பதன் மூலம் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.
இதன் மூலம் கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகள் பெரும் வளர்ச்சியடையும் என்றும், வான் மற்றும் கடல் வழித் தொடர்புகளை வலுப்படுத்துவது லங்காவியை ஒரு பிராந்திய சுற்றுலா மற்றும் பொருளாதார மையமாக மாற்றும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.







