ஷா ஆலம், ஜேன் 22 - மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் உலகப் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் நோக்கில் சிலாங்கூர் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டம் , மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படும் ஒரு பொறுப்பான நிர்வாகத்திற்குச் சிறந்த சான்றாகும்.
இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் (DNS) இத்தொகுப்புத் திட்டம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய டுசுன் துவா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ், இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்படும் 355.06 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டம் மிகவும் விரிவான, உத்திகள் நிறைந்த மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று வர்ணித்தார்.
இந்தத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முன்முயற்சியும் தெளிவான இலக்குகளையும், அடையாளம் காணப்பட்ட பயனாளிகளையும், முறையான அமலாக்கக் காலத்தையும் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இது வெறும் தற்போதைய அரசியல் லாபத்திற்காக செய்யப்பட்ட ஒன்றல்ல, மாறாக இதுவொரு பொறுப்புமிக்க நிர்வாகத்தின் அடையாளம் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
துல்லியமான தரவுகளின் அடிப்படையிலும், உலகளாவிய மோதல்களின் போது மாநில அரசு எவ்வளவு விரைவாகவும் விவேகத்துடனும் செயல்படுகிறது என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்துள்ளதாகவும், இத்தொகுப்புத் திட்டம் சிலாங்கூர் மாநில மக்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக 355.06 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ஏழு முக்கிய முன்முயற்சிகளை உள்ளடக்கிய 145.8 மில்லியன் ரிங்கிட்டும், இரண்டாம் கட்டமாக 15 கூடுதல் முன்முயற்சிகளைக் கொண்ட 209.26 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்படும் செயல்பாட்டுச் செலவின உயர்வு, விநியோகச் சங்கிலித் தடை மற்றும் வேலை இழப்பு போன்ற சவால்களிலிருந்து பொதுமக்கள், சிறு தொழில்முனைவோர்கள், விவசாயிகள், மீனவர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்தவர்களைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இத்திட்டமானது வெறுமனே அவசரத்தில் வகுக்கப்பட்டது அல்ல மாறாக கள நிலவரங்கள், துல்லியமான தரவுகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை ஆராய்ந்து, தற்போதைய சூழலில் மக்களின் தேவைக்கேற்பவும் மாநிலப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.







