வாஷிங்டன், ஜூலை 14 – அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஈரான் மீது அமெரிக்கா இன்னும் கூடுதலான தாக்குதல்களை நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு தஹ்ரானிடம் (ஈரான்) "எதுவுமே இல்லை" என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
அணுஆயுதச் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஈரானின் 'பிக்அக்ஸ் மவுண்டன்' (Pickaxe Mountain) என்று அழைக்கப்படும் நிலத்தடி வசதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் டிரம்ப் குறிப்பிட்டார்.
"பிக்அக்ஸ் நிலத்தடி மையத்தின் நுழைவாயிலுக்கு மிக அருகில் ஒரு பெரிய துல்லியமான தாக்குதலை நடத்துவதற்கான இலக்காக அது அமையக்கூடும்," என கூறிய டிரம்ப், அமெரிக்கா அதனை "மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இருப்பினும் தற்போதைக்கு அங்கு எந்தவொரு செயல்பாடும் தென்படவில்லை என தெரிவித்தார்.
"அவர்களின் அணுசக்தித் திட்டத்தின் நிலைமை தற்போது சரியாக இல்லை. அதைப் பற்றி நாங்கள் கேள்விப்படும் போதெல்லாம், அதை நாங்கள் அழித்துவிடுகிறோம்.
எனவே, அவர்கள் அதைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. ஆனால், மிக விரைவில் நாங்கள் பிக்அக்ஸ் மீது தாக்குதல் நடத்தக்கூடும்," என டிரம்ப் கூறினார்.







