இஸ்தான்புல், ஜூன் 11: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் 18 முக்கிய ராணுவ தளங்கள் மீது தங்களது படைகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குவைத்தில் உள்ள அலி அல் சலிம் (Ali Al Salem) மற்றும் அகமட் அல் ஜாபர் (Ahmad Al Jaber) ஆகிய ராணுவ தளங்களும், பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா (Sheikh Isa) ராணுவ தளமும் இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்குகளாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் புகழ்பெற்ற 5-ஆவது கடற்படைப் பிரிவின் (Fifth Fleet) பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் (Patriot Systems) மற்றும் அவற்றின் தகவல் தொடர்பு மையங்களை குறிவைத்தும் தங்களது படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் ராணுவம் தனித்தனியாகக் குறிப்பிட்டுள்ளது.
தெற்கு ஈரானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் 5-ஆவது கடற்படைப் பிரிவை நோக்கி அதிநவீன தற்கொலைப்படை ட்ரோன் (Suicide Drones) ஏவுகணைகளும் ஏவப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.
தங்களின் கடைசி மூச்சு இருக்கும் வரை எதிரிகளை எதிர்கொள்ள ஈரான் ராணுவம் உறுதியாக இருப்பதாகவும், எதிரிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கும் வரை தங்களது படைகள் எக்காரணம் கொண்டும் பின்வாங்காது என்றும் ஈரான் ராணுவத் தலைமையகம் எச்சரித்துள்ளது.
இந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எந்த நேரமும் முழு அளவிலான போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.







