அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலால் ஈரானில் மக்கள் அவதி

11 ஜூன் 2026, 2:08 AM
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலால் ஈரானில் மக்கள் அவதி

தெஹ்ரான், ஜூன் 11: தெற்கு ஈரானின் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் குடிநீர் விநியோகம் இன்றி தவித்து வருவதாக ஈரான் ஊடகங்களை மேற்கோள் காட்டி ஜெர்மன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த இரவு நேரத் தாக்குதலால், ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள குஹெஸ்தாக் (Kuhestak) நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேலும் 10 கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடுமையான வெப்பம் மற்றும் கடினமான காலநிலை நிலவும் இப்பிராந்தியத்தில், இந்தத் தாக்குதலின் விளைவாக 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய குடிநீர் வசதியை இழந்து பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது தெற்கு ஈரானின் கடலோரப் பகுதிகளில் கோடை வெயில் 30 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக பதிவாகி வரும் வேளையில், அங்குள்ள நீர் தேக்கத் தொட்டிகள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பதை விவரிக்கும் புகைப்படங்களை ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலில் இருந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நேற்று இரவில் திடீரென மீண்டும் கடுமையான மோதல் வெடித்தது.

திங்கட்கிழமை இரவு ஓமான் கடற்பரப்பிற்கு வெளியே அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாகவே, ஈரானின் மீது இந்தத் புதிய வான்வழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா உத்தரவிட்டதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா பிராந்தியம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.