அமெரிக்கா - ஈரான் அமைதி உடன்படிக்கை; பிரதமர் அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்

16 ஜூன் 2026, 4:32 AM
அமெரிக்கா - ஈரான் அமைதி உடன்படிக்கை; பிரதமர் அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்

கோலாலம்பூர், ஜூன் 16 – அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த பகைமை மற்றும் ஆயுதமேந்திய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள சுமுக உடன்பாட்டைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மனதார வரவேற்றுள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாக உள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே சுமுக உடன்பாடு ஏற்படுவதற்கும் இடைத்தரகராகச் செயல்பட்டு மிக முக்கியப் பங்காற்றிய பாகிஸ்தான் நாட்டின் தூதரக முயற்சிகளுக்குப் பிரதமர் அன்வார் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் மிக முக்கிய உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நேற்றிரவு இரவு தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த மூலோபாய கடல் வழித்தடத்தில் ஏற்படும் நீண்ட காலத் தடை மற்றும் இடையூறுகள் யாருக்கும் எந்தப் பயனும் அளிக்காது," என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் நல்லெண்ணத்துடன் செயல்பட்டு, எவ்விதத் தாமதமும் இன்றி இந்தச் சுமுக உடன்பாட்டை ஒரு நிரந்தரமான அமைதி ஒப்பந்தமாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

"மிகவும் உணர்வுபூர்வமான இந்தத் தருணத்தில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தூதரகப் பேச்சுவார்த்தைகளைக் குலைக்கும் வகையிலோ அல்லது மீண்டும் மோதல்களைத் தூண்டும் வகையிலோ அமையும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்," என்று அன்வார் வலியுறுத்தினார்.

உலக அரங்கில் ஏற்பட்டுள்ள இந்த அமைதிக்கான வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுமாறு சர்வதேசச் சமூகத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர், நியாயமான மற்றும் நீடித்த அமைதித் தீர்வை நோக்கிய அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க மலேசியா எப்போதும் தயாராக உள்ளது என்றும் உறுதியளித்தார்.

ஈரானுடனான ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததோடு, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், அமெரிக்கக் கடற்படை விதித்திருந்த முற்றுகைகளை உடனடியாக வாபஸ் பெறுவதற்கும் அவர் முழு அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.