சிங்கப்பூர் பயணம் சிலாங்கூருக்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கிறது

11 ஜூன் 2026, 1:00 AM
சிங்கப்பூர் பயணம் சிலாங்கூருக்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கிறது

சிங்கப்பூர், ஜூன் 11 - 'எஸ் ஆர் நாதன் பெல்லோஷிப்' (S R Nathan Fellowship) திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதுக்குழு சிங்கப்பூருக்கு மேற்கொண்டுள்ள பயணம், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்புகள் வழி, அதிக தாக்கம் கொண்ட பல்வேறு துறைகளில் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்த சிறப்புப் பயணம் குறித்து சிலாங்கூர் மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் நடமாட்டத்திற்கான நிர்வாகக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் விவரிக்கையில், தென்கிழக்கு ஆசியாவின் முதன்மையான முதலீட்டுத் தலமாக சிலாங்கூரை முன்னிறுத்துவதற்கு இப்பயணம் மாநில அரசுக்கு ஒரு முக்கிய தளமாக அமைந்தது என்றார்.

இச்சுற்றுப்பயணத்தின் போது, சிங்கப்பூர் அமைச்சகங்கள் மற்றும் அரசு முகமைகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதோடு, 'இன்வெஸ்ட் சிலாங்கூர்' (Invest Selangor) மற்றும் சிங்கப்பூர் ஓசிபிசி (OCBC) வங்கி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த வட்டமேஜை முதலீட்டு மாநாடும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் சர்வதேச அளவிலான தொழில்முறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தென்கிழக்கு ஆசியாவின் நிதி மையமாக விளங்கும் சிங்கப்பூருக்கு, தங்களின் வணிகத்தை விரிவுபடுத்தவும் புதிய வாய்ப்புகளைத் தேடவும் எண்ணற்ற நிறுவனங்கள் வருகை புரிகின்றன.

அந்த வகையில், அந்நிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களைச் சிலாங்கூரை நோக்கி நகர்த்துவதற்கு இந்த மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததாகக் குறிப்பிட்ட இங் ஸீ ஹான், சிலாங்கூர் மாநிலம் அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஒரு முன்னணித் தலமாக மாறும் என்பதில் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேலும், புதிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கக்கூடிய மற்றும் உயர்தர வேலைவாய்ப்புகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதிக தாக்கம் கொண்ட துறைகளில், குறிப்பாக அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான உத்திகளை மாநில அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் அவர் உறுதிபடக் கூறினார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் சென்ற இந்த உயர்மட்ட தூதுக்குழு, சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ சியன் லுங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

அதோடு மட்டுமல்லாமல், சிங்கப்பூர் அரசு முகமைகள் மற்றும் தொழில்துறைப் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளின் போது, பொருளாதாரத் திட்டமிடல், முதலீட்டு மேம்பாடு, நகர்ப்புற மறுசீரமைப்பு மற்றும் நகரக் திட்டமிடல் போன்ற வியூகப் பகுதிகள் குறித்த விளக்கவுரைகளையும் சிலாங்கூர் குழுவினர் கேட்டுப் பெற்றனர்.

வெளிநாட்டுத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் அரசுக்கு இடையே பரந்த அளவிலான உத்திப்பூர்வத் துறைகளில் கருத்துகளையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த 'எஸ் ஆர் நாதன் பெல்லோஷிப்' திட்டம் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.