சிங்கப்பூர், ஜூன் 10 – சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் நேற்று ஒரு முக்கிய உத்தியோகபூர்வச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, மலேசியா-சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சவால்களாக உருவெடுத்து வரும் எல்லைக் கடந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கூட்டு முயற்சிகள் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
மலேசியாவின் எதிர்காலம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட மந்திரி புசார், குறிப்பாகச் சிங்கப்பூரில் தூய்மையான குடிநீர் ஆதாரங்களை நிர்வகிப்பது மற்றும் வெள்ளப் பிரச்சனைகளைக் கையாள்வதில் அந்நாடு கொண்டுள்ள சிறந்த அனுபவங்களை டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தம்மோடு பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
பிராந்திய அமைதியைப் பாதுகாப்பதில் மலேசியாவும் சிங்கப்பூரும் தங்களுக்குரிய தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளன என்றும், உலகளாவிய மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த, போட்டித்தன்மை வாய்ந்த இடங்களாக இரு நாடுகளும் தொடர்ந்து திகழ வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் பெயரால் நடத்தப்படும் உயர்மட்டத் திட்டமான 'எஸ்.ஆர். நாதன் பெல்லோஷிப்' (SR Nathan Fellowship) கீழ், சிங்கப்பூருக்கான மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தின் இறுதி நாளில் மந்திரி புசார் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளார்.
பல்வேறு மூலோபாயத் துறைகளில் வெளிநாட்டு அதிகாரிகளுக்கும் சிங்கப்பூர் அதிகாரிகளுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் அனுபவப் பகிர்வுகளை ஊக்குவிப்பதே இந்த உயர்மட்டத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமது பயணத்தின் ஒரு பகுதியாக, மந்திரி புசார் இங்குள்ள தேசிய நூலக வாரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'அல்பாட்ரோஸ் கோப்பு' (Albatross File) கண்காட்சியை சுமார் ஒரு மணி நேரம் பார்வையிட்டார். இந்த வரலாற்றுப் பதிவானது, சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்த சம்பவத்தை அந்நாட்டுத் தலைவர்களின் பார்வையில் இருந்து சித்தரிக்கிறது.
பின்னணியில் பல வரலாற்று நிகழ்வுகளும் காரணங்களும் இருந்தபோதிலும், இருதரப்பு முயற்சிகளும் அந்தப் பிரிவினையை எவ்வளவு முறையான வழியில் கையாண்டன என்பதைப் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அமீருடின் ஷாரி, 1965ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்தப் பிரிவினை குறித்த மிக முக்கியமான ஆவணங்கள் இந்த அல்பாட்ரோஸ் கோப்பின் வழி பொதுமக்களின் பார்வைக்கு மிக நேர்த்தியாகவும் முறையாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாராட்டினார்.
முன்னதாக, 'ஐடிஇ காலேஜ் வெஸ்ட்' (ITE College West) கல்வி நிறுவனத்திற்கு நேரில் சென்ற மந்திரி புசார், அங்குள்ள நிர்வாக முறைகளை, குறிப்பாக வாகனத் துறை (Automotive) மற்றும் உபசரிப்புத் துறை (Hospitality) சார்ந்த தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பார்வையிட்டார்.
இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, சிலாங்கூர் மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், எம்பிஐ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சைபுல்யாசான் எம். யூசோப் மற்றும் சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையத்தின் (STDC) நிர்வாக இயக்குநர் ஹபிசால் ஹமீட் ஆகியோரும் உடனிருந்தனர்.







