பெலிங்ஹாம் அதிரடி: நார்வேயின் கனவைத் தகர்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

12 ஜூலை 2026, 2:45 AM
பெலிங்ஹாம் அதிரடி: நார்வேயின் கனவைத் தகர்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
பெலிங்ஹாம் அதிரடி: நார்வேயின் கனவைத் தகர்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
பெலிங்ஹாம் அதிரடி: நார்வேயின் கனவைத் தகர்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
பெலிங்ஹாம் அதிரடி: நார்வேயின் கனவைத் தகர்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

மியாமி, ஜூலை 12 : 2026 ஃபீஃபா உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், ஜூட் பெலிங்ஹாம் அடித்த இரு கோல்களின் உதவியுடன் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் நார்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மியாமி அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் கூடுதல் நேரத்தில் 93-வது நிமிடத்தில், ரியல் மாட்ரிட் அணியின் மத்திய திடல் ஆட்டக்காரரான பெலிங்ஹாம் இங்கிலாந்துக்கான வெற்றிக் கோலை அடித்தார்.

நார்வே அணியின் கோல்கீப்பர் ஓரியன் நைலண்ட், பெனால்டி பகுதிக்கு வெளியிலிருந்து மோர்கன் ரோஜர்ஸ் அடித்த பந்தை சரியாகப் பிடிக்கத் தவறியதால், பெலிங்ஹாம் உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பந்தை கோலாக மாற்றினார்.

தாமஸ் துஹெல் தலைமையிலான இங்கிலாந்து அணி, 2018 ரஷ்ய உலகக் கிண்ணத்துக்குப் பிறகு முதன்முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற இது வழிவகுத்தது.

1966-ல் தனது சொந்த மண்ணில் ஒரே ஒருமுறை உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து, தற்போது 60 ஆண்டுகால நீண்ட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் இரு வெற்றிகள் மட்டுமே தூரத்தில் உள்ளன.

முன்னதாக, விறுவிறுப்பான இந்த காலிறுதி ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் நார்வே வீரர் ஆண்ட்ரியாஸ் ஷ்செல்டெரப் அருமையான கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இருப்பினும், முற்பாதியின் கூடுதல் நேரத்தில், அந்தோணி கார்டன் தட்டிக் கொடுத்தப் பந்தை பெலிங்ஹாம், மிக நேர்த்தியாக நார்வேயின் கோல் கம்பத்துக்குள் அடித்து ஆட்டத்தை 1-1 என சமப்படுத்தினார்.

ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் நார்வே அணி மீண்டும் முன்னிலை பெற வாய்ப்பு கிடைத்தது. ஜூலியன் ரைர்சன் தட்டிக் கொடுத்த பந்தை நார்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலாண்ட் தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பிக்ஃபோர்ட் அதை அற்புதமாகத் தடுத்துக் காப்பாற்றினார்.

அதற்கடுத்த இரு நிமிடங்களில், கார்னர் கிக் மூலம் வந்த பந்தை இங்கிலாந்து வீரர்கள் சரியாக வெளியேற்றத் தவறியதைப் பயன்படுத்தி நார்வேயின் டார்ப்ஜோர்ன் ஹெகெம் கோல் அடித்தார்.

ஆனால், விஏஆர் (VAR - Video Assistant Referee) பரிசோதனையில், அந்த முயற்சியின் போது ஹாலாண்ட், இங்கிலாந்து வீரர் எலியட் ஆண்டர்சனை இரு கைகளாலும் தள்ளிவிட்டது தெரியவந்ததால் அந்த கோல் ரத்து செய்யப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்காததால், போட்டி கூடுதல் நேரத்திற்குச் சென்றது. அங்கு பெலிங்ஹாம் தனது இரண்டாவது கோலை அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

அரையிறுதியில் இங்கிலாந்து அணி, தற்போதைய வெற்றியாளரான அர்ஜென்டினா அல்லது சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடக்கும் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.

இப்போட்டியில் நார்வே தோல்வியடைந்த போதிலும், காலிறுதி வரை முன்னேறியது உலகக் கிண்ண வரலாற்றில் அவர்களின் சிறந்த சாதனைகளில் ஒன்றாகும்.

இதற்கு முன்பு 1938 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் அவர்கள் 16-வது சுற்று வரை முன்னேறியதே அவர்களின் சிறந்த சாதனையாக இருந்தது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.