பெர்மிங்ஹம், டிச 22- அஸ்டன் வில்லா அணி, ஞாயிற்றுக்கிழமை வில்லா பார்க் அரங்கில் நடைபெற்ற இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மோர்கன் ரோஜர்ஸ் அடித்த இரண்டு கோல்களின் மூலம் அஸ்டன் வில்லா அணி மூன்று புள்ளிகளை வெற்றிக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் அஸ்டன் வில்லா அணி, அர்சனல் அணிக்கு மூன்று புள்ளிகள் பின்னாலும், மென்செஸ்டர் சிட்டி அணிக்கு ஒரு புள்ளி பின்னாலும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இப்போட்டியில், அஸ்டன் வில்லா வீரர் ரோஜர்ஸ், முதல் பாதி ஆட்டத்தின் பிற்பகுதியில் ஜான் மெக்கின் கொடுத்த பந்தைப் பயன்படுத்தி கோல் அடித்து முன்னிலை பெற்றார். பின்னர், வில்லா தற்காப்பு வீரர் மேட்டி கேஷ் செய்த தவறால், இடைவேளைக்கு முன் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக மாத்யூஸ் குன்ஹா கோல் அடித்து சமன் செய்தார்.
இருப்பினும், 57ஆவது நிமிடத்தில் ரோஜர்ஸ் தனது இரண்டாவது அற்புதமான கோலை அடித்து வில்லா அணியின் வெற்றியை உறுதி செய்தார். இது அவருக்கு இந்த சீசனில் ஆறாவது கோலாகும்.
இந்த வெற்றி, அனைத்துப் போட்டிகளிலும் வில்லா அணி பெற்ற தொடர்ச்சியான 10ஆவது வெற்றியாகும். மேலும், 1989-90 சீசனுக்குப் பிறகு பிரிமியர் லீக் போட்டியில் தொடர்ச்சியாகப் பெற்ற ஏழாவது வெற்றியாகும்.
அஸ்டன் வில்லா அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ், பெஞ்சமின் செஸ்கோ, டியோகோ டலோட் மற்றும் பேட்ரிக் டோர்ஜு ஆகியோரின் பல கோல் முயற்சிகளைத் தடுத்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வில்லா அணியின் நிர்வாகி எமெரி, ரோஜர்ஸ் மற்றும் அவரது அணியின் ஆட்டத்தால் மகிழ்ச்சியடைந்தார். "வீரர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கழகத்திற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள், ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தைக் காண முடிகிறது," என்று அவர் கோலை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியபோது கூறினார்.


