இங்கிலாந்தின் கனவைத் தகர்த்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா; கிண்ணத்திற்காக ஸ்பெயினுடன் மோதல்!

16 ஜூலை 2026, 3:58 AM
இங்கிலாந்தின் கனவைத் தகர்த்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா; கிண்ணத்திற்காக ஸ்பெயினுடன் மோதல்!

அட்லாண்டா, ஜூலை 16 : அமெரிக்கா,அட்லாண்டா அரங்கில், புதன்கிழமை நடைபெற்ற பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் இங்கிலாந்தை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

பிற்பாதியில் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் தாக்குதல் ஆட்டக்காரர் லவுடாரோ மார்டினெஸ் (Lautaro Martinez) தலையால் முட்டி அடித்த கோல் அவ்வணியின் வெற்றியை உறுதிச் செய்தது.

இதன் மூலம், லியோனல் ஸ்கலோனியின் (Lionel Scaloni) தலைமையிலான அர்ஜென்டினா அணி, வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் 2010 வெற்றியாளரான ஸ்பெயினை எதிர்கொண்டு தனது வெற்றியாளர் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடும்.

முன்னதாக, மிக விறுவிறுப்பாக அமைந்த முற்பாதியில், இரு அணிகளும் கடுமையாக விளையாடியதால் ஆட்டம் அவ்வப்போது தடைபட்டது.

மேலும் இரு அணிகளின் கோல் அடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியிலே முடிந்ததால், முற்பாதி கோல் ஏதும் இன்றி சமநிலையில் முடிவுற்றது.

பிற்பாதி தொடங்கியதும் அர்ஜென்டினா தனது தாக்குதலைத் தொடர்ந்தது. ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் முன்கள வீரர் ஜூலியன் ஆல்வாரெஸ் (Julian Alvarez) அடித்த பந்தை இங்கிலாந்தின் கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் (Jordan Pickford) அற்புதமாகத் தடுத்தார்.

அர்ஜென்டினாவின் தொடர் அழுத்தத்தைச் சமாளித்த இங்கிலாந்து, ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. வலது பக்கத்திலிருந்து மார்கன் ரோஜர்ஸ் (Morgan Rogers) கொடுத்த கிராஸ் பாஸை சரியான நேரத்தில் ஓடிவந்த விங்கர் அந்தோணி கார்டன் (Anthony Gordon) கோலாக மாற்றினார்.

மூன்று முறை உலக வெற்றியாளரான அர்ஜென்டினா, ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் சமநிலையை எட்டப் போராடியது. கேப்டன் லியோனல் மெஸ்ஸி பெனால்டி பகுதிக்குள் கொடுத்த பந்தை, மாற்று வீரராகக் களமிறங்கிய நிக்கோ கோன்சலஸ் (Nico Gonzalez) தலையால் முட்டி கோலாக்க முயன்றார்.

ஆனால், பிக்ஃபோர்ட் மீண்டும் ஒருமுறை சிறப்பாகச் செயல்பட்டு இங்கிலாந்தின் முன்னிலையைத் தக்கவைத்தார்.

அர்ஜென்டினாவின் தொடர் தாக்குதலுக்கு ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. என்ஸோ பெர்னாண்டஸ் பெனால்டி பாக்ஸிற்கு வெளியிலிருந்து அடித்த பந்து இங்கிலாந்து வலையைத் துளைக்க, ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

அத்துடன் அர்ஜென்டினா திருப்தியடையவில்லை. கூடுதல் நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில் மெக் அலிஸ்டர் அடித்த பந்து மீண்டும் கம்பத்தில் பட்டது. எனினும், சில நிமிடங்களிலேயே லவுடாரோ மார்டினெஸ் மிக ஆக்ரோஷமாக அடித்த ஹெட் கோல் மூலம் அர்ஜென்டினா அபார வெற்றியைப் பெற்றது.

அர்ஜெண்டினாவின் வெற்றி இங்கிலாந்தின் கனவைத் தகர்த்தது. இந்தத் தோல்வியின் மூலம் தாமஸ் டுச்செல் (Thomas Tuchel) தலைமையிலான இங்கிலாந்து அணி, சனிக்கிழமை நடைபெறும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.