ஹரப்பான் ஜொகூரில் எதிர்க்கட்சியாக ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கும்

12 ஜூலை 2026, 1:52 AM
ஹரப்பான் ஜொகூரில் எதிர்க்கட்சியாக  ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கும்

ஷா ஆலாம், ஜூலை 11 - 16-வது ஜொகூர் மாநிலத் தேர்தலில் வெற்றி பெறத் தவறியதைத் தொடர்ந்து, ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தங்களது பொறுப்பை நிறைவேற்ற பக்காத்தான் ஹரப்பான் உறுதியளித்துள்ளது.

மக்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதுடன், தீர்க்கப்படாத அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்போம் என ஜொகூர் ஹரப்பான் தேர்தல் இயக்குனர் டத்தோ ஸ்ரீ அமீருதின் ஷாரி கூறினார்.

“மக்களின் விருப்பங்கள் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படாது. மாறாக, அவை எங்களின் எதிர்கால நடவடிக்கைக்கான அளவுகோலாகச் செயல்படும். மாநில அரசின் கொள்கைகளும் நிர்வாகமும் உன்னிப்பாகவும் சீராகவும் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்க எதிர்க்கட்சியாக தங்களது பங்கை ஆற்ற ஹரப்பான் கடமைப்பட்டுள்ளது,” என்று அவர் நேற்று இரவு ஜொகூர் பாருவில் இருந்து நேரலையாக ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தேசிய முன்னணி , 48 தொகுதிகளின் வெற்றியுடன் ஜோகூர் மாநில அரசைத் தக்கவைத்துக் கொண்டது.

ஹரப்பான் வேட்பாளர்கள் எட்டு இடங்களை வென்றனர்.

இதில் ஆறு இடங்களை டிஏபி கட்சியும் கெஅடிலான் , அமானா கட்சிகள் தலா ஒரு இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த ஜொகூர் தேர்தல் முடிவு ஹரப்பான் உறுப்பினர்களும் அதன் தேர்தல் இயந்திரமும் தங்களின் முயற்சிகளையும் பிரச்சாரங்களையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான அழைப்பாகும் என்று சிலாங்கூர் மந்திரி பெசாரும், கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவருமான அமிரூடின் ஷாரி கூறினார்.

ஜொகூர் தேர்தல் முடிவுகள், ஹரப்பானும் தேசிய முன்னணியும் அம்மாநிலத்தில் இரு பெரும் கூட்டணிகளாக நீடிப்பதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா என்று கேட்கப்பட்டதற்கு, ஹரப்பான் ஜோகூர் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் பல சவால்களை எதிர்கொண்டதாக அமீருதின் கூறினார்.

குறிப்பாக, கூட்டணி முழுமையாக தயாராக இல்லாத நிலையில், தேர்தல் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே அழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், குறைந்தபட்சம், வேட்பாளர் பட்டியல் முதல் தேர்தல் அறிக்கை மற்றும் பல பரிந்துரைகள் வரை ஹரப்பான் ஒரு முழுமையான திட்டத்தை முன் வைத்திருந்தது,” என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.