ஜோகூர் பாரு, ஜூலை 11 - ஜோகூர் மாநிலத்தின் 16-வது மாநிலத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில்,பல வாக்களிப்பு மையங்களில் வாக்காளர்கள் காலை மணி 7.30-க்கே வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.
இம்மாநிலத்தில் வாக்களிப்பு மையங்கள் அனைத்தும் மாலை மணி 6-க்கு மூடப்படும்.
56 சட்டமன்ற இடங்களுக்கான போட்டியில் மொத்தம் 172 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
தேசிய முன்னணி, பக்காத்தான் ஹரப்பான் இரு கூட்டணிகளுக்கு இடையில் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் போட்டி நிலவுகின்றது.
பெரிக்காத்தான் நெஷனல் 33 தொகுதிகளிலும், பெர்சாமா மலேசியா கட்சி 15 தொகுதிகளிலும், மூடா 4 இடங்களிலும், சோசலிச கட்சியும் அஸ்லி மலேசியா கட்சியும் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
பரப்புரை காலத்தில் மக்கள் வெளிப்படுத்திய அதிகப்படியான ஆர்வத்தின் காரணமாக இத்தேர்தலில் 70 விழுக்காட்டினர் தங்களது வாக்குகளைச் செலுத்த திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.











