பந்திங், ஜூலை 10 – பந்திங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பதின்ம வயதுப் பெண் ஒருவர், தெலுக் டத்தோ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக இன்று கொண்டு வரப்பட்டார்.
மஜிஸ்திரேட் மஸ்லிந்தா செலாமட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாகக் கூறி அந்தப் பெண் தலையசைத்ததைத் தொடர்ந்து, அவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட அப்பெண் ஒரு மாற்றுத்திறனாளி (OKU) என்பதைக் கருத்தில் கொண்டு, ஒரு மாதக் கால மனநல மதிப்பீட்டுப் பரிசோதனைக்காக உலு கிந்தாவில் உள்ள பஹாகியா மருத்துவமனைக்கு (Hospital Bahagia Ulu Kinta) அவரை அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தண்டனைச் சட்டப் பிரிவு 307-இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படச் சட்டத்தில் இடமுண்டு.
இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பான அடுத்தகட்ட அறிக்கை சமர்ப்பிப்பிற்காக வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதியை நீதிமன்றம் மறுதேதியாகக் குறித்துள்ளது.







