பந்திங், ஜூலை 7 - பந்திங்கில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நேற்று நிகழ்ந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான 15 வயது மாணவி, ஆட்டிசம் (Autism) குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளி (OKU) ஆவார் என தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் (YBGK) வழக்கறிஞர் எஸ். விஜேஸ்வரி தேவி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவல் (Remand) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு முறையான மருத்துவச் சிகிச்சையைப் வழங்குவதை உறுதி செய்வதோடு, அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான மனநல ஆலோசனை வழங்குவதே அமைச்சின் முக்கிய நோக்கம் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதால், பொதுமக்கள் யாரும் இது தொடர்பாகப் பொய் செய்திகளையோ அல்லது அவதூறுகளையோ சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.







