ஜோகூர் பாரு, ஜூலை 10 - மலேசியர்கள் இன வேறுபாடுகளைக் களைந்து சகோதர சகோதரிகளாக ஒன்றிணைந்து செயல்படுமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் எதிர்காலம், மக்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையை சார்ந்திருக்கிறது. வெறுப்புணர்வைத் தூண்டும் அரசியலை நம்பி அல்ல என பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் கூறினார்.
வியாழக்கிழமை (ஜூலை 9) இரவு தாமான் பெலாங்கி இண்டா பொதுத் திடலில் நடைபெற்ற "யோக்! மேராக்கான் ஜொகூர்! உண்டி ஹராப்பான்" (Yok! Merahkan Johor! Undi Harapan) நிகழ்ச்சியின் போது அவர் அவ்வாறு கூறினார்.
தமதுரையின்போது,மடானி (Madani) அரசாங்கம் சீன சமூகத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளையும் பிரதமர் மறுத்தார். அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு கொள்கையும் ஒட்டுமொத்த தேசத்தின் நலன்களையும் கருத்தில் கொள்கிறது என்று அவர் விளக்கினார்.
மைக்ரோ,சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) அரசாங்கம் வழங்கும் உதவிகள் இனம் சார்ந்தவை என்ற குற்றச்சாட்டுகளை நிதி அமைச்சருமான அன்வார் நிராகரித்தார்.
மாறாக, இந்தத் துறை தேசியப் பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பாக உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
"நாங்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) உதவும்போது, அது சீனர்களுக்கு மட்டுமே என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த நிறுவனங்கள் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன மற்றும் இந்த சிறு நடுத்தர நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள் ஆவர்.
மலாய்க்காரர்களுக்கு பிரச்சினைகள் இருந்து, உதவி தேவைப்பட்டால், நாங்கள் அவர்களுக்கு உதவுவோம் - அதனால்தான் நாங்கள் பூமிபுத்ரா திட்டத்தைத் தொடர்கிறோம்," என்று அவர் கூறினார்.
இதனிடையே, இந்திய சமூகத்தைப் பற்றிப் பேசிய அவர், அந்த சமூகத்திற்கான வாய்ப்புகளையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கு இன்னும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
மற்றொரு மேம்பாடாக, துங்கு அப்துல் ரஹ்மான் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு (TAR UMT) அடுத்த 10 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு காலத்தை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை அன்வார் ஆதரித்துப் பேசினார்.இந்த நடவடிக்கை தேசிய மனித மூலதன மேம்பாட்டிற்கான ஒரு உயர்தர கல்வி முன்முயற்சியாகும் என்றும், இதனை இன உணர்வுகளாலோ அல்லது குறுகிய அரசியல் நலன்களாலோ சிதைக்கக் கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.
"TAR UMT சீனர்களின் முன்முயற்சியாக இருந்தாலும், நான் அங்கு செல்ல தயாராக இருக்கிறேன். ஏனெனில் மலேசியர்களுக்கான கல்வி முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன். அது சீனர்களின் முன்முயற்சியாக இருந்தாலும் என்ன? மலாய்க்காரர்கள் பயனடைவார்கள். சீனர்கள் பயனடைவார்கள். இதற்காக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை," என்று அவர் கூறினார்.
கல்வி தொடர்பான பிரச்சினைகளை அரசியல்மயமாக்கக் கூடாது என்றும், அரசாங்கம் எந்தவொரு இனத்தையும் பாகுபாட்டுடன் நடத்துகிறது என்ற எண்ணத்தை அது உருவாக்கிவிடக் கூடாது என்றும் அன்வார் நினைவூட்டினார்.







