மலேசியாவில் வங்காளதேசத் தொழிலாளர் சந்தையை மீண்டும் திறக்கக் கோரிக்கை

23 ஜூன் 2026, 3:17 AM
மலேசியாவில் வங்காளதேசத் தொழிலாளர் சந்தையை மீண்டும் திறக்கக் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 23 – மலேசியாவிற்கான வங்காளதேசத் தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மான், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பிரதமர் அன்வாரைச் சந்தித்துப் பேசிய போது இக்கோரிக்கையை முன்வைத்தார்.

வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு மலேசியா என்றும் ஒரு முக்கியப் பணித்தளமாக விளங்கி வருகிறது. அவர்கள் தங்களின் தாயகத்திற்கு அனுப்பும் பணம், அந்நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய்க்கு மிக முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது.

எனினும், மலேசியாவிற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் அதிகளவில் கடன்படுவதும், கட்டாய உழைப்புக்கு ஆளாவதும் போன்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த 2024ஆம் ஆண்டு முதல் வங்காளதேசத்தில் இருந்து புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்குக் கோலாலம்பூர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான வங்காளதேசத் தொழிலாளர்கள் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு, மலேசியாவிற்கு வந்திறங்கிய பின்னர் வேலை இல்லாமல் தவித்தனர். இதனால் அவர்கள் சட்டவிரோதமாகப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, கைது மற்றும் நாடுகடத்தப்படும் அபாயங்களையும் எதிர்கொண்டனர்.

இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டிய பிரதமர் தாரிக் ரஹ்மான், மலேசியாவில் தற்சமயம் ஆவணங்களின்றி இருக்கும் தொழிலாளர்களைச் சட்டப்பூர்வமாக்குவது குறித்தும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வங்காளதேச நாட்டினரைத் தாயகத்திற்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக மலேசியப் பிரதமருடன் விரிவாக விவாதித்துள்ளார்.

தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், அவர்களின் நலனைப் பாதுகாக்கவும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சம்மதித்துள்ளதாகக் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

சில நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற்காகத் தொழிலாளர்களைச் சுரண்டுவதையும், அவர்களை மோசமாக நடத்துவதையும் இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என பிரதமர் அன்வார் மிகக் கடுமையான எச்சரித்தார்.

இந்த இருதரப்புச் சந்திப்பைத் தொடர்ந்து, மலேசியா மற்றும் வங்காளதேசத்திற்கு இடையே முதலீட்டு மேம்பாடு, கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அத்தோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (FTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

வங்காளதேசத்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் தாரிக் ரஹ்மான் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். தன் நாட்டுக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், ஆசியப் பங்காளிகளுடன் உறவை வலுப்படுத்தவும் அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.