கோலாலம்பூஎ, ஜூலை 8 - பிரபல சமூக ஊடகமான டிக்டாக்கின் (TikTok) தாய் நிறுவனமான 'பைட் டான்ஸ்' (ByteDance), மலேசியா உட்பட தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஒரு பகுதியினரை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பைட் டான்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ள செயல்பாட்டு மறுசீரமைப்பு (Restructuring) நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த ஆட்குறைப்பு பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஆட்குறைப்பு செயல்முறை மலேசியா மட்டுமன்றி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள ஊழியர்களையும் பாதித்துள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தென்கிழக்கு ஆசியாவுடன் நின்றுவிடாமல், ஐரோப்பாவில் உள்ள அதன் செயல்பாட்டு மையங்களிலும் (Hubs) நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைப்பது குறித்து பைட் டான்ஸ் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சமீபகாலமாகப் பல சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்கு மனித உழைப்பைக் குறைத்து, அதற்குப் பதிலாகச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைப் பெருமளவில் விரிவுபடுத்தி வருகின்றன.
எவ்வாறாயினும், பைட் டான்ஸ் நிர்வாகத்தின் இந்த தற்போதைய ஆட்குறைப்பு நடவடிக்கையானது AI தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பால் ஏற்பட்டதா, நிறுவனத்தின் செலவினங்களைக் குறைக்க அல்லது பிற வணிகக் காரணிகளா என்பது குறித்த முறையான விளக்கத்தை அதன் நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை.







