கோலாலம்பூர், ஜூலை 9 - சிறுவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தகவல்களைச் சமூக ஊடகங்கள் மற்றும் இதர டிஜிட்டல் தளங்களில் பரப்புவதை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசியாவின் சமூக நலத்துறை (JKM) அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில் பள்ளி மாணவி ஒருவர் சம்பந்தப்பட்டு வைரலான கத்திக்குத்துச் சம்பவம் உட்பட, சிறுவர்கள் தொடர்புடைய எந்தவொரு நிகழ்விலும் அவர்களின் அடையாளங்களை அம்பலப்படுத்தும் செயல்களைத் தாங்கள் மிகவும் தீவிரமாகப் பார்ப்பதாக JKM தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், சமூக ஊடகப் பயனாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வழக்கில் தொடர்புடைய சிறுவர்களின் அடையாளங்களை மற்றவர்கள் கண்டறியும் வகையிலான எந்தவொரு தகவலையும் பகிரக் கூடாது.
சம்பந்தப்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவோ, சாட்சிகளாகவோ, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாகவோ அல்லது சந்தேகிக்கப்படுபவர்களாகவோ இருந்தாலும் இந்த விதிமுறை அனைவருக்கும் பொருந்தும்.
சிறுவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றமாவதுடன், அது அவர்களின் பாதுகாப்பு, மனநலன், கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்கால மறுவாழ்வுச் செயல்முறைகளைப் பெருமளவில் பாதித்து, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் நீண்டகால எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தச் சட்ட விதிகளையும் சிறுவர் உரிமைகளையும் மீறும் எந்தவொரு நபருக்கும் RM10,000-க்கு மிகாத அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படலாம் என்று JKM எச்சரித்துள்ளது







