ஜகார்த்தா, ஜூலை 2: இந்தோனேசியாவில் சிறுவர் இணையப் பாதுகாப்பிற்கான 'பிபி துனாஸ்' (PP TUNAS) விதிமுறைகளின் கீழ், 16 வயதிற்குற்பட்ட பயனாளர்களுக்குச் சொந்தமான கிட்டத்தட்ட 4.9 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் டிஜிட்டல் தளங்களால் நீக்கப்பட்டுள்ளன.
முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) சமர்ப்பித்த சமீபத்திய இணக்க அறிக்கையின்படி, அந்நிறுவனம் மொத்தம் 185,000 கணக்குகளை நீக்கியுள்ளது.
மேலும், டிக்டாக் (TikTok) தளம் சுமார் 4.1 மில்லியன் வயது குறைந்தவர்களின் கணக்குகளை நீக்கியுள்ள வேளையில், யூடியூப் (YouTube) தளம் 600,000 கணக்குகளை அகற்றியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த 'பிபி துனாஸ்' விதிமுறையானது, இந்தோனேசியாவில் இயங்கும் டிஜிட்டல் தளங்கள் 16 வயதிற்கு உட்பட்ட பயனாளர்களுக்கு வயது அடிப்படையிலான பாதுகாப்பு வழிமுறைகளைச் செயல்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது.
இதில் வயது குறைந்தவர்கள் அனுமதியின்றி நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்களுக்கான இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.







