துபாய், ஜூன் 19: சிறுவர்களின் மனநலம் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த கவலைகள் உலகளவில் அதிகரித்து வரும் வேளையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இத்தகையக் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்த முதல் அரபு நாடு என்ற வரலாற்றுச் சிறப்பை அந்நாடு பெற்றுள்ளது.
வியாழக்கிழமையன்று அங்கீகரிக்கப்பட்ட புதிய தீர்மானத்தின்படி, 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தங்களின் தனிப்பட்ட பெயர்களில் சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்குவதோ, பயன்படுத்துவதோ அல்லது இயக்குவதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையின் காரணமாக, அவர்கள் சமூக வலைத்தளங்களில் எந்தவொரு பதிவுகளையும் இடவோ, கருத்துகளைப் (Comment) பகிரவோ அல்லது பொதுவான குழுக்களில் இணையவோ முடியாது என்று அந்நாட்டு அரசாங்க ஊடக அலுவலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
எனினும், 15 மற்றும் 16 வயதுடைய பதின்ம வயதினர், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதில் வயதுக்கு ஏற்ற உள்ளடக்கக் கட்டுப்பாடுகள், முகம் தெரியாத அந்நியப் பயனர்களுடனான தொடர்புகளுக்குக் கட்டுப்பாடு, திரை நேர மேலாண்மை கருவிகள் (Screen-time tools) மற்றும் பெற்றோரின் கண்காணிப்பு வசதிகள் ஆகியவை அடங்கும்.
இந்த புதிய விதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கும் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் பொருந்தும். மேலும், டிஜிட்டல் அடையாளச் சோதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட வலுவான வயது சரிபார்ப்பு முறைகளை (Age-verification) அந்த நிறுவனங்கள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும். பயனர்கள் தங்களின் வயதை அவர்களாகவே சுயமாகக் குறிப்பிடும் முறை (Self-declaration) இனிமேல் செல்லுபடியாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களால் ஏற்கனவே தொடங்கப்பட்ட கணக்குகளைச் சமூக ஊடக நிறுவனங்கள் உடனடியாக முடக்க வேண்டும். சிறுவர்கள் தங்களின் வயதை ஏமாற்றி கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்க வேண்டும் என்றும், இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்கள் (Targeted advertising) அல்லது அவர்களின் நடத்தை சுயவிவரங்களை (Behavioural profiling) ஆராய்வதற்காகச் சிறுவர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் தகுதியற்ற உள்ளடக்கங்களைப் பார்ப்பது, பாதுகாப்பற்ற இணையத் தொடர்புகள், அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்களின் தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது போன்ற பல்வேறு கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்கே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் விளக்கியுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளுக்கு இணங்குவதற்கும் தங்களது தளங்களை மாற்றிமைப்பதற்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 12 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அணுகல் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தி, சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகளுடன் தங்களின் இந்த புதிய சட்டக் கட்டமைப்பு ஒத்துப்போவதாக ஐக்கிய அரபு அமீரகம் குறிப்பிட்டுள்ளது.
இணையப் பயன்பாட்டினால் சிறுவர்களின் மனநலம் மற்றும் இணையப் பாதுகாப்பிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகள் உலகெங்கும் அதிகரித்துள்ள நிலையில், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல தேசங்கள் ஏற்கனவே சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.







