ஸ்பெயின், ஜூலை 7 - ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மூன்று மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை (Heatwave) வீசக்கூடும் என்பதால், 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் தெற்கு ஐரோப்பாவைத் தாக்கியுள்ள புதிய வெப்ப அலையின் காரணமாக, ஸ்பெயினின் அரகோன் (Aragon), கட்டலோனியா (Catalonia) மற்றும் வலென்சியா (Valencia) ஆகிய மாநிலங்கள் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என ஸ்பெயின் வானிலை ஆய்வு மையம் (AEMET) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாநிலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து, வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அதீத வெப்ப அலை எதிர்வரும் வியாழக்கிழமை வரை நீடிக்கக்கூடும். இந்தச் சிவப்பு எச்சரிக்கையானது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் சொத்துக்களுக்கும் "மிகவும் கடுமையான பாதிப்புகளை" ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் குறிக்கிறது.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், போதிய அளவு நீர் அருந்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






