பிரான்சிஸ், ஜூன் 29 - ஐரோப்பியக் கண்டத்தை உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பொது சுகாதார முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூன் 20-ஆம் தேதி முதல் ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் இந்த வெப்ப அலை, பிராந்தியத்தின் வரலாற்றிலேயே மிக மோசமான ஒன்று என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகளாவிய சராசரியை விட ஐரோப்பாவில் பருவநிலை மாற்றம் மிக அதிவேகமாக நிகழ்ந்து வருவதே இந்த வானிலைக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதீத வெப்பம் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. தற்போது இந்த வெப்ப அலையின் தாக்கம் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ள வேளையில், பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வடகிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகள் இன்னும் வெப்ப அலை குறித்த எச்சரிக்கை வளையத்திற்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் என்ற போதிலும், இந்த தீவிர வெப்பநிலையானது நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் ஆரோக்கியத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.






