புடாபெஸ்ட், ஜூன் 30: ஹங்கேரி நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அங்குள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு (Work from home) அந்நாட்டு அரசாங்கம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்த வரலாறு காணாத வெப்பநிலையின் தாக்கத்தினால், நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள், இரயில்களின் வேகக் குறைப்பு மற்றும் சுகாதார எச்சரிக்கைகள் உள்ளிட்ட பல அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய ஹங்கேரியின் பிரதமர் பீட்டர் மகியர், நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசுத் துறையின் அனைத்து நிறுவனங்களும் தங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதே அணுகுமுறையை தனியார் துறை நிறுவனங்களும் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் நேரங்களில் பொதுமக்கள் தங்களின் வெளிப்புற நடவடிக்கைகளைத் தள்ளிப்போடுமாறும், இதன் மூலம் கடுமையான வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹங்கேரி நாடு முழுவதும் 'மூன்றாம் கட்ட வெப்ப எச்சரிக்கையின்' கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 35 முதல் 40 பாகை செல்சியஸ் வரை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹங்கேரியைத் தவிர ஜெர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட பல மத்திய ஐரோப்பிய நாடுகளும் இத்தகைய கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.






