லிப்பிஸ், ஜூலை 7 - பகாங், லிப்பிஸ்-பெந்தா சாலையின் 18-ஆவது கிலோமீட்டரில், பெந்தா எஸ்டேட் அருகே இன்று காலை 7 மணியளவில் நிகழ்ந்த கொடூரமான சாலை விபத்தில் புரோட்டோன் பெர்சோனா (Proton Persona) காரில் பயணித்த தம்பதியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் புரோட்டோன் பெர்சோனா காரை ஓட்டிச் சென்ற 50 வயது முகமட் கைர் சைனுதீன் மற்றும் அவரின் 49 வயது மனைவி நோர்சைலி காலில் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக லிப்பிஸ் மாவட்டக் காவல்துறை தலைவர் சுப்பிரிடெண்டண்ட் இஸ்மாயில் மான் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தம்பதியர் கோலா லிப்பிஸிலிருந்து ரவுப் (Raub) நோக்கித் தங்களின் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்த்திசையிலிருந்து வந்த டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) ரக வாகனத்துடன் அவர்களின் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தை ஏற்படுத்திய அந்த டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்தில் 54 மற்றும் 40 வயதுடைய இரு ஆண்கள் பயணித்துள்ளனர். அவர்கள் குவா மூசாங் (Gua Musang) பகுதிக்கு டுரியன் பழங்களை ஏற்றி வருவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 41(1)-இன் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







