காஜாங், ஜூன் 29 - தாமான் இம்பியான் இண்டா குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள், பயணப் பை (Luggage Bag) ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஜூன் 28-ஆம் தேதி இரவு 8.37 மணியளவில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காஜாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசுப் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் மலேசிய அரச காவல்துறையின் (PDRM) தடயவியல் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவம் நடந்த வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பயணப் பையைச் சோதித்தபோது, அதற்குள் எந்தவொரு அடையாள ஆவணங்களும் இல்லாத ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தற்பொழுது குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இக்குற்றச்சாட்டின் கீழ் தவறு இழைத்தவர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறைத்தண்டனையுடன், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த மர்ம மரணம் அல்லது கொலைச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள், உடனடியாக வழக்கின் மூத்த புலனாய்வு அதிகாரி ஏஎஸ்பி நூர் அயுனி அஜிஸை 016-2080717 என்ற எண்ணிலோ அல்லது 999 என்ற அவசர உதவி எண்ணிலோ தொடர்பு கொண்டு காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








