குளுவாங்: ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் இந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
இரவு முழுவதும் ஒவ்வொரு தொகுதியாக முடிவுகளை அறிவிப்பதற்குப் பதிலாக, முழுமையான முடிவுகளை மட்டுமே ஆணையம் ஒரே நேரத்தில் அறிவிக்கும் என தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாரூன் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட முறையின் மூலம், இரவு 10 மணியளவில் முழு முடிவுகளையும் தயார் செய்ய முடியும் என நம்புவதாக , இன்று மஹ்கோத்தா ராணுவ முகாமில் முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்யும் நடைமுறையைப் பார்வையிட்ட பின்னர் ரம்லான் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 588 புகார்களை தேர்தல் ஆணையம் விசாரித்து வருவதாகவும், மேலும் 44 போலீஸ் புகார்கள் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேலும் மூன்று புகார்களும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இன்று முன்கூட்டியே வாக்களிக்கத் தகுதி பெற்ற 24,751 போலீஸ், ஆயுதப்படை வீரர்கள் உட்பட மொத்தம் 27 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள், இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.







