ஷா ஆலாம், ஜூலை 6 - இன்று காலை பந்திங் (Banting) பகுதியில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில், பெண் ஒருவரால் மாணவி கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய கோலா லங்காட் மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்பிரிடெண்டண்ட் முகமட் அக்மல்ரிசால் ராட்ஸி, பாதிக்கப்பட்ட மாணவியின் நிலைமை தற்போது சீராக உள்ளதாகவும், இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
கருப்பு நிற ஆடை அணிந்த பெண் ஒருவர் கையில் கத்தியை ஏந்தியபடி அந்தப் பள்ளியின் வளாகத்திற்குள் சுற்றித் திரிவதும், இதனால் அங்கு பெரும் பரபரப்பும் கூச்சலும் ஏற்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
எனினும், இச்சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே அந்தச் சந்தேக நபர் காவல்துறை அதிகாரிகளால் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







