கோலாலம்பூர், ஜூலை 6 - தீபகற்ப மலேசியா முழுவதும் தற்போது நிலவி வரும் டுரியான் பழப் பருவத்தின் காரணமாக, அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் பெரும் உள்ளூர் தோட்டக்காரர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், அடுத்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, அந்நாட்டுப் பிரதமர் லி சியாங்குடன் (Li Qiang) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகப் பிரதமர் அன்வார் உறுதியளித்துள்ளார்.
மலேசியா டுரியான்களுக்கான சந்தை வாய்ப்பை சீனாவில் மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், அவற்றுக்கான தேவையை அதிகரித்து, தற்போது தோட்டக்காரர்களின் வருமானத்தைப் பாதித்துள்ள விலை வீழ்ச்சியைச் சீரமைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
சீன அரசாங்கத்தின் இறக்குமதித் தரநிலைகள் மிகவும் கடுமையானதாக இருந்தாலும், உள்ளூர் விவசாயிகளுக்காகத் தாம் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் உறுதிபடக் கூறினார்.
மலேசியா மற்றும் சீனாவுக்கு இடையிலான சுமுகமான உறவைப் பயன்படுத்தி, கூடுதல் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இது போன்ற விளைச்சல் அதிகரிப்பின் போது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.








