கெமாமான், ஜன 21: நேற்று மாலை, கெமாமான், பெல்டா நெராம் 1 பகுதியில், ரம்புத்தான் பழம் தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
அந்த சிறுவன் மாலை 2.50 மணியளவில் கெமாமான் மருத்துவமனையில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதாகக் கெமாமான் மாவட்டக் காவல்துறை தலைவர், சூப்பரிண்டெண்ட் முகமட் ரஸி ரொஸ்லி தெரிவித்தார்.
பிற்பகல் சுமார் 1.30 மணியளவில், ஆறு வயதுடைய தனது சகோதரியுடன் சேர்ந்து அச்சிறுவன் ரம்புத்தான் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது என அவர் கூறினார்.
“திடீரென பழம் தொண்டையில் சிக்கியதால் அச்சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது,” என்று அறிக்கையில் முகமட் ரஸி குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை கவனித்த குடும்பத்தினர் உடனடியாக சிறுவனை அருகிலுள்ள சுகாதாரக் கிளினிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காகk கெமாமான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளான்.
எனினும், சிறுவனை காப்பாற்ற முடியாமல், குறுகிய நேரத்தில் அவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
“பிரேதப் பரிசோதனையில், மரணத்திற்கான காரணம் மூச்சுத்திணறல் என்றும், சிறுவனின் தொண்டையில் ரம்புத்தான் பழம் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,” என்று முகமட் ரஸி தெரிவித்தார்.


