டுரியான் வியாபாரம்: 55 தற்காலிக விற்பனை கூடங்கள் ஏற்பாடு - எம்பிஏஜே

24 ஜூன் 2026, 9:11 AM
டுரியான் வியாபாரம்: 55 தற்காலிக விற்பனை கூடங்கள் ஏற்பாடு - எம்பிஏஜே

ஷா ஆலம், ஜூன் 24: எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான டுரியான் பழப் பருவத்தை முன்னிட்டு, தங்களின் எல்லைக்குட்பட்ட 15 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மொத்தம் 55 தற்காலிக டுரியான் விற்பனைக் கூடங்களை (Sales Lots) அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஏஜே) ஏற்பாடு செய்துள்ளது.

இந்தச் சிறப்பு வசதிகள் 'பருவகால பழங்களுக்கான (டுரியான்) எம்பிஏஜே 2026 தற்காலிக சிறுவியாபார உரிமத்தின்' கீழ் வழங்கப்படுவதாகவும், ஆர்வமுள்ள உள்ளூர் வியாபாரிகள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என எம்பிஏஜே தெரிவித்தது.

இந்த டுரியான் பழ விற்பனை இடங்கள் பண்டான் இண்டா, தெராத்தாய், லெம்பா ஜெயா, புக்கிட் அந்தாராபங்சா மற்றும் உலு கிள்ளான் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் கீழ் உள்ளன.

இந்தத் தற்காலிக வணிக உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வியாபாரக் கூடங்களின் செயல்பாட்டு நேரம் காலை 7.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, வாடிக்கையாளர்கள் பார்சல் (Takeaway) மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

அதே வேளையில், உரிமம் பெற்ற வியாபாரிகள் தங்களின் வணிகப் பகுதிகளில் தூய்மையைப் பேணுவதற்கும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எம்பிஏஜே வலியுறுத்தியுள்ளது.

வியாபாரிகள் அனைவரும் நிர்ணயித்துள்ள இடங்களில் வியாபாரம் செய்வதற்கு தற்காலிக சிறுவியாபார உரிமத்தை' முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை எம்பிஏஜே கோபுரத்தின் (Menara MPAJ) 4-ஆவது மாடியில் உள்ள உரிம முகப்பில் சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு எம்பிஏஜே உரிமம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையை 03-4285 7344 என்ற தொலைபேசி எண்களின் வழி தொடர்புகொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.