கோலாலம்பூர், மார்ச் 26: தற்போதைய மற்றும் வருங்கால உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், மலேசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களின் தூதரக உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன.
இரு நாடுகளும் அனுபவித்து வரும் சமூக மற்றும் பொருளாதார செழிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சீனத் தற்காப்பு அமைச்சகத்தின் மூத்த அமைச்சர் சென் யிக்சின் ஆகியோருக்கு இடையே இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
இந்த ஆண்டு மலேசியாவிற்கு முதன்முறையாக வருகை தந்துள்ள சீன அமைச்சர் சென் யிக்சின், பிரதமர் அன்வார் இப்ராஹிமைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடினார்.
இது தொடர்பாகப் பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தச் சந்திப்பின் போது குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
பிராந்தியத்தின் தொடர்ச்சியான ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இரு நாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் பதிவில் வலியுறுத்தினார்.
பல்வேறு துறைகளில் மலேசியாவும் சீனாவும் இணைந்து அடைந்துள்ள முன்னேற்றங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியில், சீன அரசாங்கத்தின் மூத்த தலைவரின் வருகையைத் தாமும் தமது மடாணி அரசாங்கமும் மிகவும் உயர்வாகக் கருதுவதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.








