கோலாலம்பூர், ஜூலை 6 - சத்தான உணவுமுறையில் இரண்டு சுளை டுரியான் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது என்றாலும், ஒரே நேரத்தில் 15 சுளைகளைச் சாப்பிடுவது மற்றொரு முழு வேளை உணவை உண்பதற்குச் சமம் என்று உணவுமுறை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அல்ப்ரோ மருந்தகத்தின் (Alpro Pharmacy) சமூக உணவுமுறை நிபுணரான கூ வெய் ஜின், டுரியான் பழத்தில் எந்தக் குறையும் இல்லை, ஆனால் மலேசியர்கள் அதனை அளவுக்கு அதிகமாக உண்பதே முக்கியப் பிரச்சனை என சுட்டிக்காட்டினார்.
தற்போது பகாங், ஜோகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அசுர விளைச்சலால் மலேசியா முழுவதும் டுரியான் பருவம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக மூசாங் கிங் (Musang King) மற்றும் பிளாக் தோர்ன் (Black Thorn) போன்ற பிரீமியம் ரக டுரியான்கள் குறைந்த விலையில் பரவலாகக் கிடைக்கின்றன.
நாம் கூடுதலாகச் சாப்பிடும் ஒவ்வொரு சுளையும் ஒட்டுமொத்த குளுக்கோஸ் அளவை உயர்த்துகிறது. மலேசிய உணவுமுறை வழிகாட்டுதலின்படி, சராசரியாக 27 கிராம் எடையுள்ள ஒரு டுரியான் சுளையில் சுமார் 45 கிலோகலோரியும், 8 கிராம் கார்போஹைட்ரேட்டுகளும், அத்துடன் நார்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இதில் இரண்டு சுளைகள் மட்டுமே ஒரு முறை உண்பதற்கான சரியான அளவாகக் கருதப்படுகிறது.
நீரிழிவு நோய், ஆரம்பக்கட்ட நீரிழிவு, இன்சுலின் எதிர்ப்புத் திறன் உள்ளவர்கள், உடல் எடைப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது குடும்பத்தில் நீரிழிவு நோய் பின்னணி கொண்டவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.








