கோலாலம்பூர், ஜூலை 4: நாட்டிலுள்ள வங்கிகளுக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும்போது, ஒரு ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் அது குறித்து பேங்க் நெகாரா மலேசியாவிடம் புகார் செய்யுமாறு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல், வங்கித் துறையின் கட்டண விலக்குத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எந்தவொரு வங்கியின் ஏடிஎம் அல்லது ஸ்மார்ட் மறுசுழற்சி இயந்திரங்களிலும் (SRM) ஒரு ரிங்கிட் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
மலேசிய வங்கிகளின் சங்கம் (ABM), மலேசிய இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் சங்கம் (Aibim), மற்றும் மலேசிய மேம்பாட்டு நிதி நிறுவனங்களின் சங்கம் (Adfim) ஆகியவை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.
டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களின் கணக்கு எந்த வங்கியில் இருந்தாலும், நாடு தழுவிய அளவில் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மற்றும் எஸ்ஆர்எம் இயந்திரங்களைக் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் ஏடிஎம் இயந்திரங்களில் இந்த ஒரு ரிங்கிட் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று டத்தோ ஃபஹ்மி தெளிவுபடுத்தியுள்ளார்.






