புத்ராஜெயா,ஜூலை 2- ஆண்டுதோறும் மலேசியாவில், ஒரு குடும்பத்தினர் சராசரி 31.9 கிலோகிராமில் இருந்து 97.3 கிலோகிராம் வரை உணவு விரயம் செய்கின்றனர்.
அதில் சமைக்காத உணவைக் காட்டிலும் (88.75%) சமைத்த உணவுகளே (94.1%) அதிகம் விரயமாவதாக, தேசிய புள்ளி விபரத் துறையின் தலைவர் உசிர் மஹிடின் ( Uzir Mahidin) தெரிவித்தார்.
சமைத்த உணவுகள் அதிகம் வீசப்படுவது, மேலும் சிறந்த உணவுத் தயாரிப்பு திட்டமிடலைக் குடும்பத்தினர் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே, 79.3 விழுக்காட்டினர், உணவை வீட்டின் இதர கழிவுப் பொருட்களுடன் சேர்த்தே வீசுவதாகவும், 20.7 விழுக்காட்டினர் உணவையும் இதர கழிவுப் பொருட்களையும் பிரித்து வீசுகின்றனர்.
மேலும், சமைக்காத உணவு வகையில் காய்கறிகள் அதிகம் வீசப்படுகின்றன. தொடர்ந்து பழங்களும்,மீன் அல்லது கடல் வாழ் உணவு தூக்கியெறியப்படுகின்றன.
சமைத்த உணவு வகையில், சாதம் அதிகம் விரயமாக்கப்படுகிறது.
காலாவதியான தேதி, குளிர் சாதனப் பெட்டியில் நீண்ட நாட்கள் உணவை வைத்திருப்பது, அதிகளவில் சமைப்பது, வெளியில் இருந்து அதிக எண்ணிக்கையில் உணவை வாங்குவது போன்றவை உணவு விரயத்திற்கு காரணமாக அமைகின்றன







