சுபாங் ஜெயா, அக். 11 — உடல் பருமன் மற்றும் அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra-Processed Foods – UPF) அதிகளவில் உட்கொள்வது சிறுநீரகங்களின் செயல்பாட்டைப் பாதிப்பதுடன், நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease – CKD) ஏற்படும் அபாயத்தையும் அதிகரிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமன் என்பது நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது.
இது இதய நோய்கள் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றம் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கும் வழிவகுக்கக்கூடும் என சன்வே மருத்துவ நிலையத்தின் சிறுநீரக மருத்துவ நிபுணரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான டாக்டர் ரோஸ்னாவதி யஹ்யா தெரிவித்தார்.
உடல் பருமனை மதிப்பிடுவதற்கு உடல் நிறைக் குறியீடு (BMI) மட்டுமே போதுமானதல்ல என்று குறிப்பிட்ட அவர், ஒருவரின் உடல்நிலையை முழுமையாக மதிப்பிடுவதற்கு தசைகளின் அமைப்பு, உடலில் உள்ள கொழுப்பின் அளவு, திரவங்களின் அளவு மற்றும் ஊட்டச்சத்து நிலை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
சிறுநீரக நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் உடல் செயல்பாடுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சமச்சீரான உணவை உட்கொள்வதுடன் உப்பின் அளவு, சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இதனிடையே, உணவுத் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மக்கள் உணவைப் பெறும் மற்றும் உட்கொள்ளும் முறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மொனாஷ் பல்கலைக்கழகத்தின் உணவியல் பேராசிரியர் டாக்டர் திலகவதி கருப்பையா தெரிவித்தார்.
சுவை, எளிதில் கிடைக்கும் தன்மை, வசதி மற்றும் விலை ஆகியவை இத்தகைய உணவுகளை மக்கள் அதிகளவில் உட்கொள்வதற்கான முக்கியக் காரணிகளாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, அன்றாட வாழ்க்கையில் விரைவாகவும் எளிதாகவும் உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் பலருக்கு நடைமுறைக்கு ஏற்ற தேர்வாக மாறியுள்ளன என்றும் அவர் கூறினார்.







