நாட்டில் தினசரி உருவாகும் திடக்கழிவில் கிட்டத்தட்ட 40% உணவுக் கழிவு

5 அக்டோபர் 2026, 6:56 AM
நாட்டில் தினசரி உருவாகும் திடக்கழிவில் கிட்டத்தட்ட 40% உணவுக் கழிவு

கோலாலம்பூர், அக். 5 — மலேசியாவில் தினமும் உருவாகும் சுமார் 40,000 மெட்ரிக் டன் திடக்கழிவுகளில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு உணவுக் கழிவுகள் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

உணவுக் கழிவுப் பிரச்சனையைச் சமாளிக்க அரசாங்கம் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்.

மேலும், கழிவுகளை உருவாக்குவது மற்றும் கையாள்வது தொடர்பான மனப்போக்கிலும் நடைமுறைகளிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திடக்கழிவுகளை நிலக்குழிகளில் கொண்டு செல்வதைக் குறைத்தல் மற்றும் நாட்டின் மறுசுழற்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மும்தாஸ் முகமட் நாவி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இதனிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் மறுசுழற்சி விகிதத்தை 40 விழுக்காட்டைத் தாண்டச் செய்வதற்கான இலக்கை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு (KPKT) அடையும் என கோர் மிங் நம்பிக்கை தெரிவித்தார்.

‘Trash to Cash’ எனும் மறுசுழற்சி திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 7.86 மில்லியன் கிலோகிராமுக்கும் அதிகமான மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விற்பனை மூலம் RM2.85 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.

அதேவேளை, செயல்பாட்டில் இருந்த 17 பூஜ்ஜியக் கழிவு சமூக மையங்களை உள்ளடக்கிய ‘Zero Waste Community’ திட்டத்தின் மூலம் 111,504 கிலோகிராமுக்கும் அதிகமான மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கோர் மிங் குறிப்பிட்டார்.

மேலும், பள்ளிகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட மறுசுழற்சிப் போட்டியில் நாடு முழுவதும் 1,680 பள்ளிகள் பங்கேற்றுள்ளன.

அதன் மூலம் 4.95 மில்லியன் கிலோகிராம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அவை RM2.98 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.