சிரம்பான், ஜூலை 2 - கடந்த 5 ஆண்டுகளில் , ஓட்டுநர்கள் குறிப்பாக வர்த்தக ஓட்டுநர்கள் மத்தியில் மெத்தம்பெத்தமின் ( Methamphetamine ), ஷாபு,கெத்தும் போதைப் பொருளை உட்கொள்வது ஒரு டிரெண்டாகியுள்ளது.
கவலையளிக்கக் கூடிய இந்த பழக்கம் சாலை பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாக அமைந்திருப்பதாக தேசியப் போதைப் பொருள் ஒழிப்பு நிறுவனத்தின் (AADK) தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
நீண்ட நேரம் முழித்து வேலை செய்வதற்கான உற்சாகத்தினை இவ்வகை போதைப் பொருள் தரக்கூடியது எனும் நம்பிக்கையில், கடந்த ஐந்தாண்டுகளில் இந்த பழக்கம், ஓட்டுநர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
போதைப் பொருள் அதன் தன்மையை இழக்கும்போது, அதனை உட்கொண்டிருப்பவர்கள் சுயநினைவை இழக்கலாம். அதன் தன்மை அதிகரித்திருக்கும்போது, ஓட்டுநர்கள் தன்னிலை மறந்து தங்களது நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். இதுபோன்ற நிலைகளில் விபத்துகள் ஏற்படக் கூடுமெனெ டத்தோ ருஸ்லின் ஜூசோ குறிப்பிட்டார்.
இதனிடையே, நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், 244 ஓட்டுநர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 21 வயதிலிருந்து 61 வயதுக்கு உட்பட்ட 22 பேர் ஷாபு,கெத்தும்,கஞ்சா போதைப் பொருளை உட்கொண்டிருந்ததற்காக கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.







