கோலாலம்பூர், மார்ச் 26 - கடந்த வாரம் சுமார் 0.36 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருளைக் கடத்தியதாக, ஆறு மலேசிய ஆண்கள் மற்றும் இரண்டு இந்தோனேசியப் பெண்கள் என மொத்தம் எட்டு பேர் மீது இன்று மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
எம். புவனேஸ்வரன் (29), ஆர். கலையரசு (30), எம். முகிலன் (26), கே.எஸ். சுரேந்திரன் (24), எஸ். சதீஷ் குமார் (30), லோக் ஜுன் முன் (34) ஆகிய ஆறு மலேசிய ஆடவர்களுடன், ஆனந்தா (30) மற்றும் தேவி ஏகாபுத்ரி கரோகாரோ (38) ஆகிய இரு இந்தோனேசியப் பெண்களும் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர்.
மஜிஸ்திரேட் இல்லி மரிஸ்கா காலிசான் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்த அவர்கள், தங்களுக்குப் புரிந்ததாகத் தலையசைத்தனர். இருப்பினும், இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், இவர்களிடமிருந்து வாக்குமூலம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மார்ச் 15-ஆம் தேதி காலை 8:30 மணியளவில், ஜாலான் சான் சோ லின் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 357.80 கிராம் எடையுள்ள ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளைக் கூட்டாகக் கடத்தியதாகக் இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டப்பிரிவு 39B(1)(a)-இன் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் பிரிவு 39B(2)-இன் கீழ் தண்டனைக்குரிய இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை தவிர்க்கப்படும் பட்சத்தில், குறைந்தபட்சம் 15 பிரம்பு அடிகள் வழங்கப்படவும் சட்டத்தில் இடமுண்டு.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக ஜூன் 16-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் ஷஃபிகா அஸ்வா ஃபிக்ரி ஆஜரானார். மலேசிய ஆடவர்கள் அறுவர் சார்பாக வழக்கறிஞர் இயோங் ஜெய் பெங் ஆஜரான வேளையில், இந்தோனேசியப் பெண்கள் இருவர் சார்பாக எவரும் முன்னிலையாகவில்லை.








