ஷா ஆலாம், ஜூலை 21 – முன்பு மாணவர்கள் சந்தித்த சவால்களைக் காட்டிலும் இன்றைய மாணவர்கள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் சந்திக்கும் சவால்களுடன் அவர்கள் மீது திணிக்கப்படும் எதிர்பார்ப்புகளும் முற்றிலும் மாறுபட்டவையாகும்.
கல்வியில் சிறந்து விளங்க வேண்டிய கட்டாயத்துடன், பெற்றோர், பள்ளி மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் என பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் இன்றைய மாணவர்கள். இவை அனைத்தும் மாணவர்களின் மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர் லாவண்யா பிள்ளை.

“பிள்ளைகள் உடலளவில் ஆரோக்கியமாக இருந்தால் போதுமானது என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், மனநலமும் அதே அளவு முக்கியமானது. மனஅழுத்தம் குழந்தைகளின் உணர்வுகள், நடத்தை மற்றும் கல்விச் செயல்திறனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்,”. இந்த மனநல முக்கியத்துவத்தை இன்னும் அதிகமான பெற்றோர் உணராமலே இருப்பது கவலையளிப்பதாக லாவண்யா பிள்ளை தெரிவித்தார்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்திறனும் தனிப்பட்ட ஆற்றலும் இருப்பதால், அவர்களை மற்றவர்களுடன் முதலில் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து ஒப்பிடும்போது, அவர்கள் தங்களைத் தாழ்வாகக் கருதத் தொடங்குவதுடன், அது மனஅழுத்தத்திற்கும் வழிவகுக்கும்,” என்று அவர் விளக்கினார்.
நீண்டகாலமாக ஒன்றை மனதில் அடக்கி வைக்கும்போது, மாணவர்கள் எதிர்பாராத முடிவுகளை எடுக்கத் தூண்டும். பந்திங் பள்ளிக்கூடத்தில் மாணவர் ஒருவர் சக மாணவியைக் கத்தியால் தாக்கிய சம்பவம் அதன் பிரதிபலிப்பே என டாக்டர் லாவண்யா கூறினார்.
எனவே, பிள்ளைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களையும், குறிப்பாக சமூக ஊடகப் பயன்பாட்டையும் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றார்.

“ பிள்ளைகள் திடீரென அமைதியாகிவிடுகிறார்களா? அடிக்கடி கோபப்படுகிறார்களா?, படிப்பில் ஆர்வம் குறைகிறதா அல்லது தனிமையை நாடுகிறார்களா? என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். இவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக உதவியை நாடுவது அவசியம்,” என்றார்.
வேலைப்பளு காரணமாகப் பிள்ளைகளுடன் செலவிடும் நேரத்தைக் குறைக்கக் கூடாது. “எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தினமும் பிள்ளைகளுடன் சிறிது நேரம் உரையாடுங்கள். பல நேரங்களில் அவர்கள் நீண்ட அறிவுரைகளை எதிர்பார்ப்பதில்லை; அவர்கள் சொல்லுவதைக் கவனமாகக் கேட்டால் மட்டும் போதுமானது,” என லாவண்யா பிள்ளை குறிப்பிட்டார்.
“பெற்றோருடன் நெருக்கமான உறவு இருந்தால், பிள்ளைகள் தங்களது பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே பகிர்ந்து கொள்வார்கள். அதன்மூலம், நிலைமை தீவிரமடைவதற்கு முன்பே தேவையான நடவடிக்கையை எடுக்க முடியும்” என்றார்.

வீட்டில் போதிய கவனம் கிடைக்காதப் பிள்ளைகள், சமூக ஊடகங்களில் ஆறுதல் தேட முற்படுவதாகவும், அங்கு சிலர் அவர்களை தவறான வழியில் வழிநடத்தவோ அல்லது அவர்களின் மனநிலையைப் பயன்படுத்திக் கொள்ளவோ முயற்சிக்கலாம்,” எனவும் லாவண்யா பிள்ளை எச்சரித்தார்.
பள்ளிகளும் மாணவர்களின் மனநலத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றன.
“மாணவர்களின் நடத்தையில் திடீர் மாற்றங்கள் தென்பட்டால், ஆசிரியர்கள் அதனை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக வழிகாட்டல் மற்றும் ஆலோசனை ஆசிரியரிடம் பரிந்துரைக்க வேண்டும். ஆரம்பகட்ட உதவி பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்,"என்றாரவர்.
மனவேதனையைத் தனியாகச் சுமக்க வேண்டாம். சமூக ஊடகங்களைப் பிரச்சனைகள் பகிரும் ஓரிடமாக மாற்றாமல், நம்பிக்கை வைக்கும் ஒருவரிடம் முன்வைக்கும் பக்குவமும் வழிகாட்டலும் மாணவர்களுக்கு உருவாக்கித் தருவதும் பெற்றோர் ஆசியர்களின் கடமைதான் என்கிறார் லாவண்யா பிள்ளை.







