புத்ராஜெயா, ஜூலை 1: 200 லிட்டரிலிருந்து 300 லிட்டராக உயர்த்தப்பட்ட கூடுதல் 'பூடி டீசல்' (BUDI Diesel) ஒதுக்கீட்டிற்கு நேற்று வரை 30,000க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்றுள்ளதாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமிருல் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த ஒதுக்கீட்டை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றுவதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்கிறது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு ஒதுக்கீட்டை மாற்றுவதற்கான 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதனிடையே, தற்போது 100 ரிங்கிட் வரை கட்டணம் வசூலிக்கப்படும் டீசல் வாகன உரிமையாளர் மாற்றத்திற்கான கட்டண விலக்கை, இன்று (ஜூலை 1, 2026) முதல் மூன்று மாதங்களுக்கு சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அமல்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, ஜூலை 4 முதல் ஜூலை 31 வரையிலான வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு), காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மாநில ஜேபிஜே (JPJ) அலுவலகங்களிலும், மாநில யுடிசி (UTC) ஜேபிஜே அலுவலகங்களிலும் ஜேபிஜே முகப்புகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 700,000க்கும் அதிகமான பயனாளர்கள் இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் டீசல் வாகன உரிமையாளர்கள் தங்களின் தகுதி நிலை, மாதாந்திர தகுதி வரம்புகள் மற்றும் கூடுதல் விவரங்களை www.budimadani.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.






