லஹாட் டத்து, ஆகஸ்ட் 5 — பூடி மடாணி டீசல் மானியத்தைப் பெறுவதற்காக மற்றொருவரின் மைகார்ட் (MyKad) எண்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பெட்ரோல் நிலைய ஊழியருக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எட்டு மாத சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படிகளும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
பெட்ரோல் நிலைய ஊழியரான அந்த ஆண் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் உட்பட தனது சக ஊழியர்கள் இருவருடன் கைது செய்யப்பட்டதாக லஹாட் டத்து மாவட்டக் காவல்துறை தலைவர் உதவி ஆணையர் டுசுல்பாஹரின் இஸ்மாயில் தெரிவித்தார். எனினும் அந்த இருவரும் அரசு தரப்பு சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.
தனது பூடி மடாணி டீசல் மானிய ஒதுக்கீடு தனக்குத் தெரியாமல் 43.01 லிட்டர் அளவு, நான்கு முறை பயன்படுத்தப்பட்டுள்ளதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
மானிய உதவியைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் மைகார்ட் அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப வரும்போது, சந்தேக நபர் அந்த வாடிக்கையாளர்களின் மைகார்ட் எண்களைக் குறிப்பெடுத்துக்கொள்வதே அவரது கைவரிசை முறை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகுதியற்ற வாடிக்கையாளர்கள் எரிபொருள் வாங்குவதற்கு குறிப்பிட்ட மானியத்தைப் பயன்படுத்த, பூடி மடாணி டீசல் அமைப்பு இயந்திரத்தில் மைகார்ட் அட்டை (physical card) இல்லாமல் எண்களை உள்ளிடுவதற்குச் சந்தேக நபர் மேற்பார்வையாளரின் கடவுச்சொல்லைப் (supervisor password) பயன்படுத்தியுள்ளார்.
எரிபொருள் வாங்கும் நடவடிக்கைகளின்போது மைகார்ட் வழங்குவதில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பூடி மடாணி மானிய முறைகேடு குறித்த தகவல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் டுசுல்பாஹரின் அறிவுறுத்தினார்.







