LRT 3 திட்டம்: சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சி,வேலை வாய்ப்புகளுக்கான புதிய திறவுகோல் -டாக்டர் குப்புசாமி

30 ஜூன் 2026, 9:00 AM
LRT 3 திட்டம்: சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சி,வேலை வாய்ப்புகளுக்கான புதிய திறவுகோல் -டாக்டர் குப்புசாமி

ஷா ஆலம், ஜூன் 30 - நேற்று அதிகாரப்பூர்வமாக பயணிகளுக்குத் திறக்கப்பட்ட LRT 3 (ஷா ஆலம் வழித்தடம்) பொதுப் போக்குவரத்துச் சேவை, சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பில் மிகப்பெரிய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என மலாயா பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் நிர்வாகத் துறையின் முன்னாள் இணைப் பேராசிரியர் டாக்டர் குப்புசாமி சிங்காரவேலு (64) மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இந்த LRT 3 ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் மிக வேகமாக சூடுபிடிப்பதோடு, புதிய சில்லறை வர்த்தகக் கடைகள், நவீன வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவை திறக்கப்படுவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் கணிசமாக உயரும்.

இந்த புதிய வணிக முயற்சிகளால் அப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களுக்குப் பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும் டாக்டர் குப்புசாமி சுட்டிக்காட்டினார்.

இன்றைய நவீன காலகட்டத்தில் பொதுமக்கள் எப்போதும் எளிதாகப் பயணம் செய்யக்கூடிய போக்குவரத்து வசதிகள் நிறைந்த இடங்களையே விரும்புவதால், LRT 3 நிலையங்களுக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் நிலங்களின் மதிப்பு பெருமளவு அதிகரிக்கும் என்பதோடு இதன் காரணமாக அப்பகுதிகளில் வாடகைத் தொகையும் உயரும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தப் புதிய திட்டத்தினால் கிராப் (Grab) போன்ற இ-ஹெய்லிங் (E-hailing) வாகன ஓட்டுநர்களும், டாக்சி ஓட்டுநர்களும் பெரும் பயனடைவார்கள்; ஏனேனில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து LRT நிலையங்களுக்குச் செல்லவும், LRT நிலையங்களிலிருந்து மீண்டும் தங்களின் இருப்பிடங்களுக்குத் திரும்பவும் இந்த இ-ஹெய்லிங் சேவைகளை அதிகம் பயன்படுத்த வாய்புண்டு.

சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் தினசரி அலுவலகம் செல்வோர் எதிர்கொள்ளும் மிக கடுமையான பிரச்சனைகளில் போக்குவரத்து நெரிசலும் ஒன்றாகும். சொந்த வாகனங்களை எடுத்துக் கொண்டு சாலைகளில் மணிக்கணக்கில் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்க நினைப்பவர்கள் தற்போது இந்த வசதியான ரயில் சேவைக்கு மாறுவதன் வழி, போக்குவரத்து நெரிசல் 15% முதல் 20% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களின் எண்ணிக்கை குறைவதால், காற்று மாசும் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.

இருப்பினும், இந்த பிரம்மாண்டமான திட்டம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டுமானால், அதன் 'முதல் மைல் மற்றும் கடைசி மைல்' (First mile and last mile) இணைப்பை ரயில் நிர்வாகம் மிகச் சிறந்த முறையில் கையாள வேண்டும் என்று டாக்டர் குப்புசாமி வலியுறுத்தினார்.

பொதுமக்கள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து ரயில் நிலையத்தை எளிதாக அடையவும், நிலையத்திலிருந்து தங்களின் இலக்கை தடையின்றிச் சென்றடையவும் போதுமான இடைநிறுத்தப் பேருந்துகள் மற்றும் வேன் வசதிகளை நிர்வாகம் மிகச் சரியாக ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த போக்குவரத்து இணைப்புகள் சரியாக அமைந்தால் மட்டுமே இந்த திட்டம் முழு வெற்றியை அடையும்.

இந்த LRT 3 திட்டத்தின் ஆரம்பக்கட்ட திட்டமிடல் காலத்தில் (Planning time) நிபுணத்துவக் குழு உறுப்பினராக டாக்டர் குப்புசாமியும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.